dob


   ஸ்டிரைக்குக்குப் பணிந்தது அரசு... போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தது!


    தமிழகத்தில் 3 நாட்களாக நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் டிசம்பர் 28 ஆம் தேதியில் இருந்து, கடந்த 3 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி 29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அரசின் பிடிவாதம் காரணமாக, ஒரு நாள் முன்னதாகவே டிசம்பர் 28 ஆம் தேதியன்றே போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து விட்டனர். இதனையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். தற்காலிக பணியாளர்களால் பேருந்துகள் இயக்கப்பட்டும் மக்கள் தவிப்படைந்து வந்தனர். புத்தாண்டுக் கொண்டாட்டம், விடுமுறைக் கொண்டாட்டம் என மக்களின் திட்டம் அனைத்தும் பாழாய்ப் போனது. இந்நிலையில், எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சியான அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்ததால் அரசு அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து வேறு வழியில்லாத நிலையில், தற்போது இறங்கி வந்துள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 100 சதவீதத்தில் இருந்து 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அது அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படியானது கணக்கிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். இந்த 7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!


No comments:

Post a Comment