dob

தமிழில் முதல் மார்க் வாங்கிய ஹரியானா இளைஞர்கள்! - அஞ்சலகத் தேர்வில் அதிர்ச்சி

 

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற கோஷம் தமிழ்நாட்டுக்குப் புதுசு இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த நிலைமை மத்திய அரசுப் பணி நியமனங்களில் தொடர்வதுதான் வேதனை. அஞ்சலகத் தேர்வில், தமிழகத்தில் இருக்கும் காலியிடங்களை வட இந்தியர்களே ஆக்கிரமிக் கிறார்கள் என்ற சர்ச்சை லேட்டஸ்ட்டாக எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் 44 அஞ்சலகக் கோட்டங்களில் காலியாக இருக்கும் 310 அஞ்சலகப் பணியாளர் களுக்கான (போஸ்ட்மேன்) தேர்வு, கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுக்க பலரும் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் மார்ச் 14-ம் தேதி அஞ்சலகத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  ஹரியானா மாநிலம் தவிர மற்ற மாநிலங்களிலிருந்து தேர்வு எழுதிய எவரும் இந்தப் பணிக்குத் தேர்வுசெய்யப்படவில்லை. 

கணக்கு, பொது அறிவு, ஆங்கிலம், தமிழ் என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 25 வீதம் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நம்மவர்களே தமிழில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கும்போது, தமிழே அறியாத ஹரியானா மாநில இளைஞர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருப்பதுதான்!  

இந்தத் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியுள்ள தமிழக மாணவர்கள், மதுரை கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பேசினோம். “தமிழ் இலக்கணத் தேர்வில் தமிழ் படித்த நாங்களே 25-க்கு 18 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கமுடியவில்லை. ஆனால், ஹரியானா மாணவர்கள் 23, 24 என எடுத்திருக்கிறார்கள். இதில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் வந்தது. தேர்வு செய்யப்பட்டுள்ள வட மாநில மாணவர்களின் செல்போன் எண்களை இணையதளத்திலிருந்து எடுத்து, அவர்களில் சிலரிடம் பேசினோம். அவர்களுக்கு இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆங்கிலம்கூட தெரியவில்லை. ‘தமிழ் நஹி மாலும்’ என்றுதான் கூறுகிறார்கள். அவர்கள் எப்படி தமிழில் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடியும்?

முறைகேடாக ஆட்கள் தேர்வு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழோ, ஆங்கிலமோ தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் போஸ்ட்மேன் வேலையை எப்படிப் பார்ப்பார்கள்? அஞ்சலகத் துறையின் இணையதளத்திலிருந்து நாங்கள் இப்படித் தகவல்கள் எடுப்பது தெரிந்ததால், திடீரென அந்த இணையப் பக்கத்தை முடக்கிவிட்டார்கள். இதை நாங்கள் விடப்போவதில்லை. சி.பி.ஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்” என்றனர். 

மயிலாடுதுறையைச் சேர்ந்த ரவிசங்கர், “என் மகன் கடுமையாக உழைத்து மிகச் சிறப்பாகத் தேர்வு எழுதினான். அவனுக்கு 71 மதிப்பெண்கள் தான் கொடுத்திருக்கிறார்கள். 44 கோட்டங்களிலும் முதல் இரண்டு இடங்களிலும் ஹரியானா மாணவர்கள் மட்டுமே தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. அவர்களில் பலரும் பத்தாம் வகுப்பில் 40 சதவிகித மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார்கள். இதில் மட்டும் அவர்களால் எப்படி இவ்வளவு மார்க் வாங்க முடிந்தது? அஞ்சலகத் தேர்வுத் துறையைக் கண்டித்து, மத்திய, மாநில அரசுகளுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன்.


குறுக்கு வழியில் தகுதியற்றவர்களை மத்திய அரசுப் பணியில் புகுத்தும் இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும்.