dob



‘‘தனியாருக்கு மாற்றினால் நாடு தழுவிய வேலை நிறுத்தம்’’ - ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கை
‘‘1975-ல் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிரான போராட்டத்தை முதலில் தொடங்கியவர்கள் ரயில்வே தொழிலாளர்கள்தான். அதன் பலனை அப்போது காங்கிரஸ் அனுபவித்தது. அதேநிலை இன்றைய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்படும். ரயில்வே துறையை தனியாருக்கு மாற்ற முயற்சித்தால் வருகிற நவம்பர் 23-ம் தேதி முதல், தண்டவாளத்தில் ரயில் சக்கரங்கள் சுழலாது’’ என்று முழங்க ஆரம்பித்து இருக்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள்.

ரயில்வே ஊழியர் சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ..ஆர்.எஃப்-பும் இணைந்து மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இதில் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் பல்வேறு மாநிலத் தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கடந்த 23-ம் தேதி முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து எதிர்ப்பைக் காட்டிய தொழிலாளர்கள், கடந்த 30-ம் தேதி கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் சி..ராஜா தர், ‘‘இந்திய ரயில்வேயில் 14 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் நேரடிக் கண்காணிப்பில் நியமிக்கப்பட்ட பிபேக் தேப்ராயின் அறிக்கை முழுவதும் ரயில்வே தொழிலாளர்களுக்கு எதிராகவே உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வேயை தனியாருக்குக் கொடுப்பதற்கும், ஐந்து வருட காலத்தில் ஆறு லட்சம் தொழிலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு அனுப்புவதற்கும் இந்த அறிக்கை ஆலோசனை சொல்கிறது. வாரிசு வேலைக்குத் தகுதியான நபர்களை ரயில்வே நிர்வாகமே தேர்வு செய்யும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ரொக்கம் வழங்கப்பட மாட்டாது, பாண்டுகளாக கொடுக்க வேண்டும், ரயில்வே பள்ளிகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளோடு இணைத்துவிட வேண்டும், ரயில்வே மருத்துவமனைகளை மூடிவிட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஹெல்த் கார்டு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளார்கள்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத ஊர்களில் தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளை எங்கே சேர்ப்பார்கள்? ஓய்வூதிய பலனை பாண்டுகளாகக் கொடுத்தால் அதனால், தொழிலாளிக்கு எந்த பலனும் இல்லையே! டிக்கெட் பரிசோதகர்கள் தேவையில்லை, முக்கிய ரயில்களை இயக்கும் பொறுப்பு, ரயிலில் தண்டவாள பராமரிப்பு, ரயில் நிலையங்கள் முதலியவற்றை தனியாரிடம் விட வேண்டுமென்றும் கூறியுள்ளனர். சரக்குப் போக்குவரத்தை 70 சதவிகிதம் தனியாருக்கு வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்கள். இது ரயில்வேக்கு வரும் முக்கிய வருமானம் தனியாருக்குப் போவதற்கான ஏற்பாடுதானே? இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எப்போதும் உதவ நினைக்கும் மோடியின் கனவுத் திட்டமாகும். இந்த கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்த மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ரயில்வேயை தனியார்களும் பன்னாட்டு நிறுவனங்களும் கட்டுப்படுத்தினால், இந்திய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கீழ் நிலையிலுள்ள மக்கள் வேலை பெற முடியாது. எல்லாமே அவுட் சோர்சிங், அப்ரன்டீஸ் பயிற்சி மூலம் குறைந்த சம்பளத்தில் படித்த இளைஞர்களிடம் வேலை வாங்கி, அவர்களைக் கசக்கிப் பிழிந்து உடனே வீட்டுக்கு அனுப்பும் சூழ்ச்சி. எந்தத் தொழில் பாதுகாப்பும் இப்போது கிடையாது. ஏற்கெனவே பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவையை தனியார்களிடம் விட்டதனால் இன்று தனியார் செல் நிறுவனங்கள் கொழுத்துவிட்டன. அதனால், இன்று பி.எஸ்.என்.எல் இருக்கும் இடம் தெரியவில்லை. மோடி அரசு, அதானிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நம் நாட்டின் பொதுத் துறைகளை விற்றுவிட முயற்சிக்கிறது.
அதுமட்டுமில்லாமல், தொழிற்சங்கங்கள் செயல்படுவதும் அவருக்குப் பிடிக்காது. இந்திரா காந்தி எமர்ஜென்சியைக் கொண்டு வந்தபோது நம் நாட்டில் அதற்கு எதிராகப் போராட்டத்தை முதலில் தொடங்கியவர்கள் ரயில்வே ஊழியர்கள்தான். பிபேக் தேப்ராய் கமிட்டி அறிக்கையை மோடி அரசு ஏற்கக் கூடாது. அதையும் மீறி அமல்படுத்த நினைத்தால் மோடி அரசை அப்புறப்படுத்த எங்கள் போராட்டம் தொடரும். நவம்பர் 23-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அன்றைய தினம் நாட்டில் எந்த ரயில்களின் சக்கரங்களும் சுழலாது’’ என்றார்.
போராட்டத்துக்கு தயார் ஆகிவிட்டார்கள் ஊழியர்கள்.

No comments:

Post a Comment